ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள நியாய விலைக்கடை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் மாற்று கட்டிடம் வேண்டி கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குருவன்கோட்டை கிராமத்தில் உள்ள இந்த நியாய விலைக்கடை, கடந்த 2000 ஆம் ஆண்டு ஆலடி அருணா சட்டத்துறை அமைச்சராக இருந்த போது, திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் செயல்பட்டு வரும் இக்கடையில் 1364 அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கடையின் கட்டடம் மேல்பகுதி, தரைத்தளம், மற்றும் சுற்றுப்புற சுவர்கள் மிகவும் பழுதடைந்து எப்போது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் தீர்வு காணப்படவில்லை என கூறபடுகிறது. மேலும் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களான நாகபட்டினத்தை சேர்ந்த எடை அலுவலர் ராஜேந்திரன்(53) மற்றும் திருவாரூரை சேர்ந்த பட்டியல் எழுத்தர் அன்பழகன்(48) ஆகியோர் மாற்று கட்டிடம் வேண்டி'தங்களது உயரதிகாரிகளிடம் பலமுறை இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.ஆனால் மாற்று கட்டிடத்திற்கு தீர்வு ஏற்படவில்லை.
மழை நேரம் என்பதால் கட்டிடம் நீரை உறிஞ்சி இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் ரேசன் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் தலையிலும் மேற்கூரை பெயர்ந்து காயத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே சிறிய அதிர்வைக் கூட தாங்க இயலாத இக்கட்டடத்தை பெரிய விபத்து ஏதும் நிகழும் முன்பாக மாற்ற வேண்டும் என்று கடை ஊழியா்கள் பொதுமக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.






