Saturday, 29 July 2017

ஆலங்குளத்தில் தினமணி நாளிதழ் -அரசு பள்ளி சாா்பில் அப்துல்கலாம் நினைவு தினம் பேரணி




ஆலங்குளத்தில் தினமணி நாளிதழ் - அரசு மேல்நிலைப்பள்ளி சாா்பில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு  பேரணி-          படங்கள் - சாலமோன் ஜெபராஜ்












ஆலங்குளத்தில் தினமணி நாளிதழ் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய கலாம் நினைவு  பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கிறிஸ்டல் மேரி தலைமை வகித்தார். நகர வியாபாரிகள் சங்க செயலர் சின்னமணி முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்}மாணவிகள்  ஆலங்குளம் நகர முக்கிய வீதிகளில் கலாம் உருவப்படம், பொன்மொழிகள் தாங்கிய பதாகைகளை தாங்கியபடி  பேரணியாக சென்றனர். முன்னதாக பள்ளியில் கலாம் உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரணியில் ஆசிரியர்கள் இந்திரா ரத்தினபாய், மதலின் ரீட்டா வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஆலங்குளம் பத்திாிகையாளா்கள் சிதம்பரம், சரவணன், அன்பழகன், சாலமோன் ஜெபராஜ், சாமுவேல் பாபு  உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Friday, 7 July 2017

நெல்லையில் தேரோட்டம் கோலாகலம்

 
நெல்லையப்பர் கோயிலில் 513 வது தேரோட்டம் பக்தர்களின் அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய விண்ணை முட்டும் கோஷத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கோவிலின் 4 ரதவீதிகளும் விழாக்கோலம் கண்டது.
திருநெல்வேலி-07-07-17
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் 513 வது ஆண்டு ஆனித்தேரோட்டம் அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது..
தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். நெல்லையப்பர் கோயில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இக்கோயில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் 850 அடிநீளத்திலும், 756 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு பிரகாரங்கள் 387 அடி நீளமும், 42 அடி அகலமும் நடைபாதை 17 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்பிரகாரம் மற்றும் மேல் பிரகாரங்கள் 295 அடி நீளமும் 40 அடி அகலமும், நடைபாதை 17 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் கோபுரங்கள் 1626ல் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 13 அடுக்குகள் கொண்டு தேர் அலங்காரம் அமைக்கப்பட்டு தேரோட்டம் நடந்து வந்தது. ஆனால் தேரோட்டத்தின் போது காற்று வீசுவதால் தேர் சாய்ந்த நிலையில் வருவதுபோல் தோன்றும். ஆகையால் தேரின் உயரம் 9 அடுக்காக குறைக்கப்பட்டது. தற்போது 5 அடுக்குகளாக ஆக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.
இத்தகைய சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடும், இரவு சுவாமி, அம்பாள் ரதவீதி வலமும் நடைபெற்று வந்தது. நேற்று காலை நடராஜர் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வலம் வருதலும், பச்சை சாத்தி ரதவீதி உலாவும் நடந்தது. மாலையில் கங்காளநாதர் தங்கசப்பரத்தில் வீதிவலம் நடந்தது.
இதைதொடர்ந்து இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோயில் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.  . முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகளில் திடீர் கடைகள், தோன்றியதால் 4 ரதவீதிகளும் விழாக்கோலம் கண்டது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 தமிழகத்தில் 3வது பெரிய தேர்
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமித்தேர் தமிழகத்தின் 3வது பெரிய தேராகும். தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடியாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புகளை உடைய 513வது ஆனிதேரோட்டம் இன்று நடக்கிறது.
பக்தர்களால் மட்டுமே இழுக்கப்படும் தேர்
சுவாமி தேரோட்டம் 1504லும், 13ம் நூற்றாண்டில் சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேருக்கு இரும்பிலான அச்சானி 1800ம் ஆண்டு லண்டனிலிருந்த கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது. இதனை தற்போதும் தேரின் அடிப்பகுதியில் காணலாம். திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் புல்டோசர் மூலமே தள்ளப்பட்டு இழுக்கப்படுகின்றன. ஆனால் நெல்லையப்பர் கோயில் தேர் தொடர்ந்து 513வது ஆண்டாக பக்தர்கள் மூலம் மட்டுமே இழுக்கப்பட்டு வருகிறது. சுவாமி தேரை சுற்றிலும் சிவபுராணம், விஷ்ணுபுராணங்களை விளக்கும் வகையில் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. சமூக ஒற்றுமையை வலியுறுத்தவே ஆண்டு தோறும் கோயில்களில் தேரோட்டம் நடத்தப்படுகிறது.
இருவழிப்பாதை அமல்
ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் சுவாமி அம்பாளை தரிசிக்க இருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி, அம்பாள் பிரதான நுழைவு வாயில் வழியாக வரவேண்டும். தரிசனம் முடித்து மேலவாசல் மற்றும் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Monday, 3 July 2017

நெல்லையில் காவல் துறை துணை தலைவராக கபில் சராட்கர் பொறுப்பேற்பு

நெல்லை காவல் துறை துணை தலைவா் கபில் சராட்கா் 
     நெல்லையில் காவல் துறை துணை தலைவராக கபில் சராட்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்; நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி மதம் தொடர்பான மோதல் சம்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலை தொடர நடடிவக்கை மேற்கொள்ளப்படும்.
    சாலை விபத்துக்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு,  குற்றச்சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சைபர் கிரைம் குற்றங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.