Wednesday, 28 June 2017

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேட்டி

*பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*_நெல்லையில் இன்று (28/06/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;_*

1. நெல்லை மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை இடையூறு அளித்து வருவதாக புகார்கள் வருகின்றன. நாள் ஒன்றுக்கு 5 வேளைகளில் 2 நிமிட அளவில் ஒருநாளைக்கு வெறும் 10 நிமிடங்கள் அளவுக்கே பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்காக கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவான 70 டெசிபல் அளவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களும் இந்த நிபந்தனைகளை தான் வலியுறுத்துகின்றன. ஆனால், காவல்துறை இதை எதையுமே கணக்கில் கொள்ளாமல் பள்ளிவாசல்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என நெருக்கடி அளிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பொதுவாக விதிமீறல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏராளமான விசயங்களில் உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் அளித்துள்ளது. விதிமீறல் கட்டிடங்கள், அனுமதி இல்லாத கட்டிடங்கள் போன்றவற்றை இடிக்க வேண்டும் என பல்வேறு தருணங்களில் உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்த முனைப்புக்காட்டாத காவல்துறையும், வருவாய் துறையும் பள்ளிவாசல் விசயங்களில் தீவிரம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலோ மற்ற சமூகத்தினரின் விழாக்களிலோ அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைத் தாண்டி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதை காவல்துறையோ, வருவாய்த்துறையோ கண்டுகொள்ளாமல் இருக்கும் அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி மறுப்பது என்பது வழிபாட்டு உரிமையை முஸ்லிம்களுக்கு மறுக்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஆகவே, பள்ளிவாசல்களில் வழிபாடுகளில் இடையூறு இல்லாமல் காவல்துறை துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

2. சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் அஸ்வின் குமார் என்ற பாஜக பிரமுகரும் அவருடைய தந்தையும் சிலரால் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் முகநூலில் பத்வா கொடுத்து அறிவித்துவிட்டு தாக்கினார்கள், தாக்கியவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்றெல்லாம் பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். இந்த பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி பொது அமைதியை கெடுக்கும் வகையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், பாஜக மாநில செயலாளர் ராகவன், பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்பட பாஜகவின் தேசிய, மாநில தலைவர்கள் ஈடுபட்டனர். இந்த அவதூறு மூலம் மாநிலம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலை உருவாக்க அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள்.

ஆனால், இந்த வழக்கில் அதே சமூகத்தை சார்ந்த, அதே ஜாதியை சார்ந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் உண்மை இப்படியிருக்க இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த பாஜக தலைவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? அவர்கள் பரப்பிய அவதூறுக்கு பிராயச்சித்தம் என்ன? அவர்கள் உருவாக்கிய பதட்டத்திற்கு பதில் என்ன? பொது அமைதிக்கு மிகப்பெரிய அளவில் பங்கம் விளைவிக்கிற வகையில் வன்முறையை தூண்டும் வகையில் இத்தகைய கருத்துக்களை பதிவு செய்த பாஜக தலைவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

தொடர்ச்சியாகவே இதுபோன்ற விசயங்களில் பாஜக தலைவர்கள் அவதூறுகளை பரப்பி தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்க முனைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் நடந்த ஒரு தற்கொலையை இஸ்லாமியர்கள் செய்த கொலையாக அவதூறு பரப்பினார்கள் இதே தலைவர்கள். பிறகு அது தற்கொலை என காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இப்படி உண்மைக்கு மாறாக பொய்யை பரப்பக்கூடிய பாஜக தலைவர்களை பொய்யர்கள் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். இந்த பொய்யர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

3. அதிமுகவின் மூன்று அணிகளும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்ததன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறார்கள். அதிமுகவை பிளவுபடுத்திய, அதிமுகவை துண்டாடிய பாஜகவுக்கு எதிராக அதிமுக களமாடியிருந்தால் தமிழக மக்களிடம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்திருக்கும். ஆட்சியை இழந்திருந்தாலும் கட்சியை காப்பாற்றுவதற்கும், வலிமையான சக்தியாக மாறுவதற்கும் அது வாய்ப்பை உருவாக்கியிருக்கும். ஆனால், பாஜகவிடம் இப்போது மண்டியிட்டதன் மூலமாக தமிழக மக்களிடம் இருந்த செல்வாக்கையும் அதிமுக இழக்கக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறது. அதிமுக தலைவர்கள் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது.

4. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரும் ஜூலை 21 அன்று சென்னையில் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. கட்சியின் 9ம் ஆண்டு துவக்கவிழா, பெருநாள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆகியன நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

சிறந்த பொதுநல தொண்டுக்காக காயிதேமில்லத் விருதும், சிறந்த மனித உரிமை களப்பணிக்காக தந்தை பெரியார் விருதும், ஒடுக்கப்பட்டோர் நலன் உழைப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் விருதும், சிறந்த கல்விச் சேவைக்காக காமராசர் விருதும், தமிழ் இலக்கியம் மற்றும் சிறந்த எழுத்து ஆளுமைக்காக கவிக்கோ விருதும், சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக நம்மாழ்வார் விருதும், சிறந்த சமூக சேவைக்காக அன்னை தெரசா விருதும் வழங்கவிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் பல்வேறு சாதனையாளர்களை கவுரவிக்கவும் இருக்கிறோம். என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், நெல்லை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஏ.கரீம், மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, செயலாளர் ஹயாத் முகமது, எஸ்.டி.டி.யூ. மாவட்ட தலைவர் ஹைதர் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment